
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம !
பதினெண் சித்தர்கள் போற்றி !!
நந்தி அகத்தியர், மூலர், புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்
நந்தியிடைக் காடரும், போகர் புலிக்கையீசர்
கருவூரார், கொங்கணவர், காலாங்கி
சிந்தி எழுகண்ணர், அகப்பேயர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டை நாதர்
செந்தமிழ் சேர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வோம்.
“வெளியில் வெளிபோய் விரவியவாறும்
அளியில் அளிபோய் அடங்கியவாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கியவாறும்
தெளியுமவரே சிவ சித்தர்தாமே.’’
என்பது சித்தர்கள் இயல்புபற்றித் 'திருமூலர்' செப்பிடும் சீரிய கருத்தாகும். சித்தர்கள் சிவயோக நெறியில் நின்று சித்தி பெற்று செயற்கரியனவற்றைச் செய்திடும் ஆற்றல் சான்றவர்கள்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கும் சுகம் பெற்ற செம்மல்கள். இப்பெரியார்கள் 'விண்ணிறைந்து மண்ணிறைந்து எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவர நிறைந்து, சோதியாய் நின்று ஒளிர்ந்து, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" எனும் திருமூலர் வாக்கின்படி.
ஆன்மிக அமிழ்தினைத்தேடி அலையும் நன்மக்களுக்கு 'உன் மயிர்க்கால் தோரும் அமுது ஊர நீ கண்டு கொள்' என மெய்ப்பொருளை இன்றும் உணர்த்தி வருகின்றனர். இவ்வழியில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறவர் 'மகா சித்த புருஷர்' ஸ்ரீ கருவூரார் ஆவார்.
கருவூரார் எனும் சொல் பதம்பிரிக்கப்படின் கரு+ஊரார் என அமையும். அதாவது இனி இவர் கருவில் ஊரமாட்டார், பிறப்பில்லை என்பதாகும் பிரம்மத்தை உணர்ந்தவர்களே மற்றவர்களுக்கு பிரம்மத்தை உணர்த்தமுடியும், பிறப்பறுத்தவர்களே மற்றவர்களின் பிறப்பறுக்க முடியும்.
பதினெண்சித்தர்களில் ஒருவரான 'ஸ்ரீ கருவூரார்' நமக்கு குருவாய் வாய்த்தது நாம் செய்த சிவபுண்ணியமாகும். குருநாதரின் திருவடி பணித்து, அவர் தம்மை வெளிப்படுத்திய காலத்தில், நடந்த நிகழ்வுகளை, தொகுத்து வழங்குகிறோம்.
பேரான இன்னமொரு வழிதான் சொல்வேன்
பேருலகில் கீர்த்தி பெற்ற புனிதவனே
சீரான கருவூரார் பிறந்த நேர்மை
செப்புகிறேன் செம்பவள வாயால்கேளீர்
கூரான சித்திரையாம் மாதமப்பா
குறிப்பான அஸ்தமது ரெண்டாம் பாதம்
தேறான நாட்களிலே பிறந்த சித்து
தேற்றமுடன் கருவூரார் என்னலாமே - 5890
ஆமேதான் 'தேவதத்தன்' என்று சொல்லி
அப்பனே அவன் மைந்தன் மயனென்பார்கள்
நாமேதான் சொன்னபடி மயனுக்கல்லோ
நாடாளக் கருவூரார் பிறந்தரெல்லோ
போமேதான் பொன்னுலக தேவ தச்சர்
பொங்கமுடன் கருவூரார்க்கு ஈடுமல்லோ
ஆமேதான் பாண்டியற்கு உருவு செய்து
அப்பனே தான் கொடுத்த சித்துமாமே! - 5891
போகர் 7000ல் ஆறாவது காண்டத்தில் (தாமரை நூலகம் வெளியீடு) ஸ்ரீ கருவூரார் பிறந்த மாதம் சித்திரை என்றும், அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதத்தில் பிறந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது. பொன்னுலக தேவதச்சர் தேவதத்தன் மைந்தன் மயனுக்கு பிறந்தவர் என்றும் கருவூராரை குறிப்பிட்டுள்ளார்.
கருவூராரைப் பற்றிய பல அரிய தகவல்கள் அபிதான சிந்தாமணி நூலில் சொல்லப்பட்டுள்ளது. ஐந்திலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த மகா சித்தர்.