ஶ்ரீ கருவூராரின் பிறப்பு
- பழநி கந்தசாமி
- Jun 25, 2017
- 2 min read
சித்தர்களிலே இந்திய வரலாற்று நூல்களில் இடம்பெற்ற ஒரே சித்தர் ஸ்ரீ கருவூரார். பொற்காலம் என்று போற்றப்படும் சோழர் சாம்ராஜ்யத்தை ஆண்ட இராஜராஜசோழனின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறார் ஸ்ரீ கருவூரார்.

கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களிலுஞ் சிறப்புடையதாய், காவேரி என்னும் தெய்வத்தன்மையுள்ள நதியினால் எந்தக் காலத்திலும் குறைவுபடாத நீர் வளப்புடையதாய், நஞ்சையும், புஞ்சையும் செறிந்தோங்கும் சோழப் பேரரசின் மன்னன் இராஜராஜன் விசனத்துடன் இறைவனிடம் வேண்டினான். நான் செய்த பாவம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. என் செருக்குதான் இதற்கு தடையோ என்று யாம் அறியோம். என் குறைகளை நீக்கி, குற்றத்தை மன்னித்து தாங்கள்தான் அருள் பாலிக்க வேண்டும் என்று எம்பெருமான் சிவனிடம் மன்றாடினான்.
அப்போது அசரீரி வாக்கு கேட்டது. கருவூரான் என்ற நாமம் கொண்ட சித்தன் வருவான். அவன் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து தருவான். கவலை நீங்குவாயாக என்று சொன்னது உடனே, மன்னன் இராஜராஜன் தன் அமைச்சரவை கூட்டி, அசரீரியின் வாக்கு பற்றி கூறினான். கருவூராரின் பெருமை என்ன? அவரின் அருமைகளைத் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் என்று அமைச்சர்களிடம் கேட்டான்.
மூத்த அமைச்சர் ஸ்ரீ கருவூராரைப் பற்றி கூறத்தொடங்கினார்.
கருவூர் என்னும் மாநகரத்தில் தேவதச்சனின் மைந்தன் மயனுக்குப் பிறந்தவர் ஸ்ரீகருவூரார். அவர் 5ம் நூற்றாண்டிலிருந்து இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
பொதிகை மரபைச் சார்ந்த மகாசித்தர் போகரின் சீடராவர். சிற்ப கலைகளிலும் வாஸ்து சாஸ்திரத்திலும் வல்லுநர். பதிணென் சித்தர்களில் ஒருவர். சிவத்தைப் பார்ப்பதாகத் தோன்றும் தோற்றத்தை உடையவர். தம் குரு போகர் தேவரின் ஆசியினால் வாலை மனோன்மணித் தாயைப் போற்றி தாயின் அன்பை பெற்றவர். அஷ்ட மாசித்திகள் கைவரப்பெற்றவர். அதனாலே அவரும் கனிவானவர். அவர் திருவடியை வணங்கினால் அவருடைய அருள் நம்மைக் காக்கும்.
கருவூரில் வாழ்ந்த காலத்தில் வெறும் ஆச்சார அனுஷ்டானங்களை மட்டும் கடைபிடிக்கும் வேதியர்கள் கருவூராரை தூஷித்து அவருடைய மாண்பை குறை கூறி இழிவுபடுத்தினர். எதற்கும் ஒரு வரம்பு உண்டு அதையும் மீறி சித்தருக்கு தொந்தரவு கொடுத்தனர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமூலரின் கூற்றின்படி சீரிய கொள்கையைத் தன்னகத்தேக் கொண்டு மாணிக்கத்துள்ளே மரகதச் சோதியாய் ஒளிரும் இறைவனின் திருக்கூத்தை மனத்தகத்தேக் கண்டு மகிழும் அப்பெருஞ் சித்தரை அச்சுறுத்தவில்லை. அறிவற்ற அவ்வேதியர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக அம்மாநகரில் அகாலத்தில் அடாத மழையை வருவித்து ஆற்றில் வெள்ளத்தை உண்டாக்கியும் பூதகணங்கள் தமக்கு குடை பிடிக்க வரச் செய்தும் மருட்டினார். பின் கருவூரிலிருந்து கிளம்பி மகாமுனி அகத்தியர் பெருமானை தரிசிக்க பொதிகை மலை சென்றார்.
உலகத்துப் பித்தர்கள் இச்சித்தரை பித்தரெனக் கருதினர். அவர்கள் கண்களிலிருந்து சித்தர் மறைந்த பின்னர்தான் அப்பித்தர்களுக்கு சித்தர் பெருமை விளங்கியது. “சித்தரென்றும் சிறியரென்றும் அறியயொறாத சீவர்காள் சித்தர் இங்கு இருந்த போது பித்தரென்று எண்ணுவீர்” என்று சிவவாக்கியரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
இந்த உலகம் வாழும்போது எந்த மகான்களையும் அறிஞர்களையும் கொண்டாடியதில்லை.
Kommentare